ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு யாருக்கும் ஒரு வியப்பு அல்ல. சற்றே குறைவான வாக்குப்பதிவு, எதிர்பார்த்த வெற்றி, வியப்பு தராத வோட்டு வித்தியாசம்…. என எல்லாம் கணிக்கப்பட்ட அளவிலோ அல்லது சற்றே கணிக்கப் பட்ட அளவை விட அதிகமாகவோ இருந்தது.
வெற்றியை அ.தி.மு.க இவ்வாறு பார்க்கிறது:
1) முதல்வர் ஜெயலலிதா, ஆறாவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு
2) பதிவான ஓட்டுகளில், 88.43 சதவீதத்தை பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட அனைவரும், ‘டிபாசிட்’ இழந்தனர்
3) இடைத்தேர்தலில், அதிக ஓட்டு வித்தியாசத்தில், வெற்றி பெற்றவர் என்ற சாதனையை, முதல்வர் ஜெயலலிதா அடைந்துள்ளார்
4) தி.மு.க.,வின் ஓட்டு வங்கி ஆர்.கே.நகர் தொகுதியில் உடைக்கப் பட்டது [இடைதேர்தல் வேறு பொதுத் தேர்தல் வேறு; இந்த வாக்கு வங்கி சேகர்பாபு அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு என்பது என் கருத்து]
5) பொய்யான வழக்கு என்பதற்கு மக்கள் அளித்த தீர்ப்பு
6) இது போன்ற மாபெரும் வெற்றி அடுத்த பொதுத் தேர்தலிலும் பெறுவோம்
வெற்றியை தி.மு.க இவ்வாறு பார்க்கிறது:
1) ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன
2) தேர்தல் ஆணையம் செயல்படவே இல்லை
3) ஜனநாயகத்தை சீர்குலைக்க நடக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க, தி.மு.க., போராடும்
4) இடைத் தேர்தல் வெற்றி எப்பொழுதும் நிர்ணையிக்கப்பட்ட ஒன்றுதான்
5) அடுத்த பொதுத் தேர்தல் வேலைகளை இப்பொழுதே ஆரம்பிப்போம்
வெற்றியை காங்கிரஸ் இவ்வாறு பார்க்கிறது:
1) ……
2) ……
3) ……
4) ……
5) ….ஏதாவது சொல்லணும் ….”தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர முனைப்புடன் செயல்பட வேண்டும்”….
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட கம்யூனிஸ்ட் மகேந்திரன் அவர்களுக்கும் மற்றும் சுயட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்.
மேல் கூறிய அனைத்திற்கும் அப்பாற்பட்டு, இந்த வெற்றிக்குப் பின் முதல்வர் ஜெயலலிதா இடைத்தேர்தல் அவர்களின் அறிக்கையும் மற்றும் அவர்களது செய்திப் பேட்டியின் போது அவர்களுது மகிழ்ச்சியான முகமும் என் எண்ணங்களைக் கவர்ந்தது.”2016 பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த, இடைத்தேர்தலில், என்னை வெற்றி பெறச் செய்த, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி.வாக்காளர்கள் என் மீது வைத்திருக்கும், நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை, நிறைவேற்றித் தர, தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை, இந்த தருணத்தில் அளிக்கிறேன” என்பதுதான் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையின் சாரம்.
கட்சி சாராத எனக்கு, முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்வேகம் மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கு சார்ந்த நிகழ்வுகள், ஆட்சியில் பல்வேறு சிக்கல்கள், வீட்டினுள் சுய முடக்கம், கட்சிப் பணிகளில் தேக்கம் என் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு வருடம் ஜெயலலிதா அவர்களுக்கு சோதனைக் காலமாக நகர்ந்தது. ஜாமின் கிடைத்து வெளி உலகம் வந்தபோதும் மற்றும் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை ஆனாபோதும் இல்லாத மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் நேற்று தென்பட்டது. தமிழகம் மற்றும் இந்திய அரசியல் இரண்டிலும் செல்வாக்குள்ள ஜெயலலிதா அவர்களின் இந்த “comeback”, மாநிலம் நலம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மீண்டும் ஒரு புதிய சக்தியைத் தரும் என்பது என் நிலைப்பாடு. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புள்ள இந்தத் தருணத்தில் மாநிலம் சார்ந்த நன்மைகளை முதல்வர் பதவியில் உள்ள ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றுவார் என்பதும் என் கணிப்பு.
“வெற்றியை” தாண்டி இந்த “உத்வேகம்”, ஜெயலலிதா அவர்களுக்கு காலத்தின் தேவை. என்னுடைய இந்த மனநிலையில், மீதம் உள்ள சொற்ப மாதங்களில் பதவியில் இருந்து கொண்டு ஜெயலலிதா அவர்கள் ஆற்றப்போகும் பணிகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பல கோடித் தமிழனில் ஒருவனாய் நானும்…..