சென்ற வார இறுதியில் மூன்று முக்கிய நிகழ்வுகளை முழுமையாக கவனித்துக் கொண்டிருந்தேன்:
1) இந்திய குடியரசு தின உரை/அணிவகுப்பு மரியாதைகள்
2) அமெரிக்க அதிபர் ஒபாமா வரலாற்றுச் சிறப்புமிகு இந்திய பயணம்
3) இயற்கை விவசாயம் Vs பசுமைப் புரட்சி விவசாயம் – விஜய் டிவி நீயா நானா விவாதம்
இந்த குடியரசு தினம் ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் நடந்தது. கொட்டும் மழையில் நடந்த அணிவகுப்பு மரியாதைகள், சுவிங்கம் மென்றபடி ஒபாமா, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கொடிக்கு ‘சல்யூட்’ அடிக்காதது சரியா தவறா விவாதம், முதன்முறையாக 3 படைகளிலும் உள்ள பெண் வீரர்களின் அணிவகுப்பு (இதுக்கு இவ்வளவு நாள் ஆச்சுப்பா), சத்குருவுக்கு VIP அருகில் இருக்கை (யாராவது கவனிச்சிங்களா ?)…. ஒரு பெரிய கண்கவரும் நிகழ்வு.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் மெகா திட்டங்களுக்கு முதலீட்டை ஈர்பப்பதற்கு பிரதமர் அலுவலகம் முனைப்பு காட்டியது. அதிக முதலீடு கொண்ட பெரும் திட்டங்களை பிரதமர் அலுவலகமே நேரிடையாக கண்காணிக்கும் என்ற செய்தி. சுமார் 24,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு, அனுஅயுத கொள்கைகளில் முன்னேற்றம், இந்தியாவின் அனைத்து கோடிஸ்வர தொழில் அதிபர்களும் வரிசையில் நின்று வணக்கம் வைத்தது, மோடி அணிந்த உடையில் தனது பெயரையும் கையால் நெய்து பொறித்திருந்தது….. என மற்றுமொரு பெரிய கண்கவரும் நிகழ்வு.
“இந்தியாவில் டீ விற்றவர் பிரதமராக முடியும், தலித் சட்டம் எழுத முடியும் என்ற நிலை இந்தியாவில் இருக்கிறது என்பது பெருமையான விஷயம். நிறத்தால் குறைத்து மதிக்கப்பட்டவனும் நான், சமையல்காரன் பேரனும் அமெரிக்காவில் அதிபராக முடியும் என்ற நிலை உள்ளது..” ஒபமாவின் கருத்து….
“வெற்றி …வெற்றி …வெற்றி “…முன்னேற்றம் நோக்கி பயணம்… இருநாட்டு உறவு மேன்மை …. பொருளாதார வளர்ச்சி…. என்பன போன்ற கோசங்கள் ….
முக்கிய நாளில் விஜய் டிவியின் நுன்னரசியல் நிகழ்வு. மண்சார்ந்த கோபம் கொண்ட இயற்கை போராளிகள் ஒருபுறம் மற்றும் மாற்று கருத்து கொண்ட “படித்த” அறிஞர்கள் மறுபுறம். விவசாயமும் மற்ற தொழில்களும் ஒன்றல்ல என்பதனை முழுமையாக நம் சமூகம் உணரவில்லை எனத் தெளிவாக காட்டிய வாதப் பிரதிவாதங்கள் மிக அதிகம். அறிவியல் ஆய்வு கட்டுரைகள் அணைத்து உண்மைகளையும் சொல்லது, சொல்லமுடியாது என்ற நடைமுறைச் சிக்கலை மறந்து பேசியோர் அதிகம். முடிவு எட்டப்படாமல், யாரும் கைகலப்பில் இறங்காமல், இந்த நிகழ்ச்சி “ஒரு விவாதத்தின் ஆரம்பம்” என கூறி நிறைவு செய்தனர்.
மேற்கூறிய மூன்று நிகழ்வுகள் சார்ந்த காட்சிகளும் கருத்துகளும் என்னுள் பல கேள்விகளை எழுப்பின. மூன்று நிகழ்வுகள் சார்த்த உணவு, நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதாரம், சந்தைமயமாக்கம், தாராளமயமாக்கம், விவசாயம், அணுசக்தி, வணிகபலம், PT விதை என்ன பலகோணங்களில் பல கேள்விகள்…குழப்பங்கள்….
இறுதியாக திங்கள் இரவு “தாய்மைப் பொருளாதாரம்” என்ற நூலில் ஒரு 50 பக்கங்கள் வாசித்தேன். காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி குமரப்பா அவர்களின் கட்டுரைகளின் தமிழாக்க நூல். இந்த வாசிப்பில் நான் என்ன உணர்ந்தேன் என நான் எழுதப்போவதில்லை…ஆனால் இந்த வாசிப்பில் என்னைக் கவர்ந்த சிலவரிகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
“பணத்தை முன்னிறுத்தும் போது ஒழுக்கமும், பண்பாடும் பின்தள்ளப்படுகிறது…” – பக்கம் 9
“காந்தி குடிசைத் தொழில்களை முன்னிலைப்படுத்தியதிற்கு மையப்படுத்தல் இல்லாத பரவல் உற்பத்தி வேண்டும் என்பதே காரணம்…” – பக்கம் 12
“உரிமை சார்ந்த பொருளாதரத்திற்கு பதில், கடமை சார்ந்த பொருளாதரத்திற்கு மாறுவோம்…” – பக்கம் 15
“லாபம் ஒரு குறிக்கோளல்ல. அது அழிவாகும்…” – பக்கம் 17
“போரின் கரு பொருளாதரத்தில் புதைந்துள்ள காலமிது…” – பக்கம் 27
“வளரும் நாடுகள் தமது வளர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு வாழ்வது அவற்றின் சுதந்திரத்தின் முதல் தேவை…” – பக்கம் 29
“பகிர்வு என்பது சமூக அமைதிக்கான அடிப்படைத் தேவை ….” – பக்கம் 31
“நமது தற்போதைய அரசியல் சட்டம் பல்வேறு நாடுகளின் சட்டக் கதம்பக்கூட்டே…” – பக்கம் 42
“தர்ம ஜனநாயகத்தை நடைமுறையில் செயலாக்க உன்னத வழி காதி…” – பக்கம் 45
மேற்குறிய வரிகள் உங்களுக்கும் பல பதில்களைத் தரலாம் , சிந்தனையைத் தூண்டலாம். இந்த நுலைப் முழுமையாக படித்தபின்னர் மேலும் எழுதுகிறேன்…
முக்கியமான செய்தி …தயவு செய்து J.C.Kumarappa யாருன்னு கேட்காதிங்க….வேணும்னா இங்க போய் பார்த்துகோங்க http://en.wikipedia.org/wiki/J._C._Kumarappa